நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதியிலிருந்து புதியதாக யாருக்கும் கரோனா தொற்றுநோய் ஏற்படாத நிலையில் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 61 ஆகவே நீடித்துவந்தது. மேலும், அதில் 51 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பிய நிலையில், குறைந்திருந்த பாதிப்பு எண்ணிக்கை நேற்று ஒரேயடியாக உயர்ந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த 3 பேர், நாமகிரிபேட்டை பகுதியை சேர்ந்த 2 பேர், புதுசத்திரம் பகுதியை சேர்ந்த 7 பேர், ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த ஒருவர் என நேற்று ஒரேநாளில் 15 பேருக்கு கோவிட்-19 நோய்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் நோய் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்தது. இந்த 15 பேரும் தற்போது நாமக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நாமகிரிபேட்டை பகுதியைச் சேர்ந்த இரு நிறைமாத கர்ப்பிணி பெண்களில் ஒருவருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தைக்கு நாளை கோவிட்-19 கண்டறிதல் சோதனை நடத்தப்படவுள்ளதாக சுகாதாரத் துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கரோனா பாதிப்பு குறைந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறும் நிலையில் இருந்த நாமக்கல் மாவட்டம் நேற்று ஒரே நாளில் தொற்றுப் பரவலில் அதிக எண்ணிக்கை உறுதியானதால் மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறை அலுவலர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.