நாமக்கல்: எருமப்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளியான சூர்யா என்பவருக்கும், பொட்டிரெட்டிப்பட்டியை சேர்ந்த கஸ்தூரி என்பவருக்கும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இந்நிலையில் இவர்களுக்கு ஆறு வயதிலும், நான்கு வயதிலும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இதன் பின் கஸ்தூரி கடந்த ஆண்டு மீண்டும் கர்ப்பமாகி கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் தேதியன்று பிரசவத்திற்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 4ஆம் தேதியன்று கஸ்தூரிக்கு மூன்றாவதாக மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதையடுத்து கஸ்தூரிக்கு மூன்று குழந்தைகள் உள்ளதால் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளுமாறு தம்பதியினரை மருத்துவர்கள் கேட்டுள்ளனர். ஆனால் குடும்பக் கட்டுப்பாடு செய்ய அந்த தம்பதியினர் மறுத்த நிலையில் சந்தேகமடைந்த மருத்துவர்கள் சூர்யா தம்பதியினரை கண்காணிக்கத் தொடங்கினர்.
தொடர்ந்து தாய் வீட்டிலிருந்து கஸ்தூரி திரும்பிய நிலையில், ஏப்ரல் 13ஆம் தேதி அதிகாலை தங்கள் குழந்தை இறந்து விட்டதாகக் கூறி பொட்டிரெட்டிப்பட்டி மயான பூமியில் புதைத்துள்ளனர். இதன் பின் குழந்தையின் இறப்பில் மரமம் இருப்பதாக கூறி மருத்துவர்கள் எருமப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இப்புகாரின் அடிப்படையில் புதைக்கப்பட்ட குழந்தையை தோண்டி எடுத்து உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்து, அதில் சேகரிக்கப்பட்ட தடயங்களை பெங்களூரில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இறுதியாக மூன்று மாதங்களுக்குப் பிறகு வந்த ஆய்வின் முடிவில் குழந்தையின் தலையில் இரும்பால் பலமாக தாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதன்பின் எருமப்பட்டி காவல் துறையினர் கஸ்தூரியை மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அவர்கள் மேற்கொண்ட கிடுக்குப்பிடி விசாரணையில், மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்த ஆத்திரத்தில் பிறந்து 10 நாள்களே ஆன தனது குழந்தையை வீட்டில் இருந்த இரும்பால் தலைப்பகுதியில் அடித்துக் கொலை செய்து விட்டு, இயற்கை மரணம் என தான் நாடகமாடியதாக வாக்கு மூலம் அளித்துள்ளார். இதையடுத்து கஸ்தூரியை காவல் துறையினர் கைது செய்து நீதிபதி முன் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.