நாமக்கல்: மோகனூர் புதுத் தெருவை சேர்ந்தவர் கோபி. இவருக்கு திருமணமாகி குணவதி என்ற மனைவியும் பிரணவ் பிரியன்(5), சுஜித்பிரியன் (2) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். டீக்கடை நடத்தி வரும் கோபி நேற்று(13.03.2023) இரவு பணிக்கு சென்று விட்டநிலையில் குணவதிக்கும் குணவதியின் தந்தையான கேசவனுக்கும் குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த குணவதி தனது இரு மகன்களையும் அருகில் உள்ள கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்டார். இதனைக் கண்ட குணவதியின் தந்தை கேசவன் மனமுடைந்து அவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
பணி முடிந்து வீட்டிற்கு வந்த கோபி தனது மாமனார் வாயில் நுரை தள்ளிய நிலையில் கண்டதும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் மனைவியையும் இரு மகன்களையும் தேடி பார்த்த போது கிணற்றின் அருகே மனைவியும், கிணற்றில் குழந்தைகளும் சடலமாக கிடந்தனர்.
பின்னர் சம்பவம் தொடர்பாக மோகனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூன்று சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், "சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்னை என தெரியவந்துள்ளது. தற்கொலைக்கு முயன்ற கேசவன் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்" என்று கூறினர்.
தற்கொலை என்பது எந்த பிரச்னைக்கும் தீர்வல்ல. உங்களுக்கு தற்கொலை செய்துக்கொள்ளும் எண்ணம் வந்தாலோ மன உளைச்சலில் இருந்தாலோமாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 அல்லது ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 ஆகியவற்றின் மூலம் ஆலோசனை பெறலாம்.
இதையும் படிங்க:அரசு வேலைக்காக போலி சாதிச் சான்றிதழ்.. தண்டிக்காமல் விடக்கூடாது.. உயர் நீதிமன்றம்..