கரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வெளியே வர வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளனர். அதன் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் தேவையின்றி வெளியே வருபவர்களுக்கும் முகக்கவசம் அணியாமல் வருபவர்களையும் தடுத்து நிறுத்தி, காவல் துறையினர் அபராதம் விதித்தும் வாகனங்களைப் பறிமுதல் செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், இராசிபுரம் உட்பட 30 இடங்களில் நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது தேவையின்றியும் முகக்கவசம், தலைக்கவசம் அணியாமலும் இருசக்கர வாகனங்களில் வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களைத் தடுத்து நிறுத்தியும் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், முகக் கவசத்தின் கட்டாயம் குறித்து எடுத்துரைத்துள்ளனர்.
மேலும் இன்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் முகக் கவசம் அணியாமல் வந்த நபர்கள் மீது 1,008 வழக்குகள் பதியப்பட்டு, ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று தான் அதிகப்படியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என நாமக்கல் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்த வேப்பிலையுடன் திரியும் மக்கள்!