பருவ மழையை பயன்படுத்தி விவசாயிகள் விவசாய நிலங்களை உழுது தயார்படுத்துவது வழக்கம். உழுதல் உள்பட்ட பணிகளுக்கு காளை மாடுகளை பயன்படுத்தி முற்றிலும் இயற்கை முறையில் விவசாயம் செய்துவந்தனர். காலப்போக்கில் விவசாயத்தை நவீனம் ஆட்கொள்ள, ஏர்கலப்பையை வீசிவிட்டு டிராக்டர் மூலம் நிலத்தை உழுதனர். இதன்மூலம் காளை மாடுகளின் வளர்ப்பு குறைந்து, அவை வெறும் இறைச்சிக்காக வெட்டப்படும் நிலை ஏற்பட்டது.
நவீனம் வந்து நமது நேரத்தை மிச்சப்படுத்தினாலும், மனிதனுக்கும் விலங்குக்கும் இடையேயான தொடர்பு அத்துப்போகும் அபாய நிலையை அடைந்துவிட்டோம். அந்த நிலையை மாற்ற வித்திட்டுள்ளார் நாமக்கல் விவசாயி.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள நன்செய்இடையாறு பகுதியைச் சேர்ந்த விவசாயி செந்தில்நாதன். இவர் புதுவித தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கை முறையில் இரு ஜோடி காங்கேயம் காளைகளை வைத்து தன்னுடைய நிலத்தினை உழுது வருவதாகக் கூறுகிறார்.
ரேக்ளா பந்தயங்களுக்கு பயன்படுத்தப்படும் வண்டியில் சிறிது மாற்றத்தினை மேற்கொண்டு, நவீன ரக டிராக்டர்களில் பயன்படுத்தப்படும் கலப்பையிலும் சிறிது மாற்றத்தினை ஏற்படுத்தி, இவை இரண்டையும் இணைத்து மாடுகள் இழுக்கும் வண்ணம் மிகக் குறைந்த எடையில் ஒரு இயந்திரத்தை உருவாக்கி, அதன்மூலம் நிலத்தை உழுது விவசாயம் செய்துவருகிறார். இதனால் நிலம் செம்மைப்படுவது மட்டுமின்றி, மனிதனுக்கும் விலங்குக்கும் இடையேயான உறவு புத்துயிர் பெரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.