நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஜவ்வரசி ஆலை உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று (டிச. 10) நடைபெற்றது. மின் துறை அமைச்சர் தங்கமணி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மரவள்ளி கிழங்கிற்கு உரிய விலை கிடைக்க வேண்டும், ஜவ்வரிசியில் கலப்படத்தை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை சேலம் சேகோ சர்வ் தலைவர் தமிழ்மணி வலியுறுத்தினார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சேலம் சேகோ சர்வ் தலைவர் தமிழ்மணி, “கடந்த வாரம் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் ஆலைகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன்படி நேற்று (டிச. 10) அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜவ்வரிசி உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டது.
மரவள்ளி கிழங்கிற்கு கூடுதல் விலை நிர்ணயம்செய்யப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார். ஜவ்வரிசியில் கலப்படம் செய்வதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது” என்றார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, “கடலூர் மாவட்டத்தில் 340 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. தற்போது அந்தப் பணிகள் 90 விழுக்காடு நிறைவடைந்துள்ளது.
அதில் முதற்கட்டமாக 11 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரண்டு மாதங்களுக்குள் கடலூர் மாவட்டத்தில் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணி முடிவடைந்துவிடும்.
அதேபோன்று நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியிலும் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் புதைவட மின்கம்பிகள் அமைப்பது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...பிரதமர் மோடி அணிந்த மாஸ்க்; தற்சார்பு தொழில்; கர்நாடக தொழில்முனைவோரின் கதை