நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநில மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி அரசின் பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று கலந்துகொண்டு முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தார். மேலும், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ரூ. 2 கோடி மதிப்பில் காவேரி நகர் பகுதியில் 23 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் அவர் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், " தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் தடையற்ற மின்சாரம் வழங்கும் வகையில் ஒற்றைக் கம்ப மின்மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதன்மூலம் மின்மாற்றிகளில் பழுதுகள் ஏற்படாது. அரசின் நிதி நிலைமைக்கு ஏற்ப இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்.
தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களிலும் சென்னை உள்ளிட்ட மின் அழுத்தம் அதிகமாக உள்ள பகுதிகளிலும் துணை மின்நிலையம் விரைவில் அமைக்கப்படும். மின்சாரத் துறையில் இருக்கும் காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டு நிரப்பப்படும்.
நீட் தேர்வு விலக்கு கோரி குடியரசுத் தலைவரிடம் அரசின் மனு சென்றபோது with held (நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது) என்றுதான் பதில் வந்துள்ளது. எனவே நீட் தேர்வு விலக்கிற்குத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு பாடுபடும். நீட் விஷயத்தில் எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் அரசியலுக்காகப் பொதுமக்களிடம் பரபரப்பை ஏற்படுத்த முயல்கிறார். அவரின் முயற்சி பலிக்காது." என்றார்.