நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள 14 ஊராட்சிகளில் எழுபதாயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. கொல்லிமலையில் பல இடங்களில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு வரை சேளூர் பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் தினமும் பாக்சைட் தாதுகளை வெட்டி எடுத்துச் சென்றது. இதனை எதிர்த்து சமூக ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பாக்சைட் எடுக்கத் தடை உத்தரவு பெற்றனர்.
இந்நிலையில், தற்போது கொல்லிமலைப் பகுதிகளில் நீர் மின் திட்டப் பணிகளுக்காகச் சட்டவிரோதமாக மீண்டும் பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. மலைப்பகுதியில் மேற்கொள்ளும் கட்டுமான பணிகளுக்குத் தேவையான கட்டுமான பொருட்கள் நிலப்பரப்பிலிருந்து தான் எடுத்துச் செல்ல வேண்டும் என அரசு உத்தரவிட்டது. ஆனால் இதனை மீறி நீர் மின் திட்டப் பணிகளுக்காக அனுமதியின்றி கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. இயற்கையைப் பாதுகாக்க ஒருபக்கம் போராடினாலும் அது அழிவதற்கு அதிகாரிகளே துணை போவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து, மலைவாழ் மக்கள் தலைவர் குப்புசாமி கூறுகையில், “ கொல்லிமலை பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இங்கு இதுபோன்று அனுமதியின்றி செயல்படும் கற்கள் உடைக்கும் இயந்திரத்தைக் கொண்டு சட்டவிரோதமாகக் கற்கள் எடுக்கப்பட்டு வருகிறது. இது கொல்லிமலை வாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கற்களை உடைக்க வெடி வைத்துத் தகர்க்கப்படுவதால் அருகாமையில் உள்ள வீடுகளில் அதிர்வு ஏற்படுகிறது. இந்நிலை தொடர்ந்து வந்தால் இயற்கைவளங்கள் அனைத்தும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நீதிமன்றத்தை நாடவுள்ளோம்.”, எனத் தெரிவித்தார்.
இது குறித்து, சமூக ஆர்வலர் பரத்குமார் கூறுகையில், கொல்லிமலையில் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைக் கண்டிப்பதாகவும் இந்நிலை தொடர்ந்து நீடித்தால் தமிழகத்தில் இயற்கைவளம் என்பதே இருக்காது எனவும் தெரிவித்தார். மேலும், பெரிய அளவில் கனிமவளங்கள் கொள்ளையில் அரசு அலுவலர்கள் துணையுடன் நடக்கும் எனும் சந்தேகம் எழுந்துள்ளது எனவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.