ஊரடங்கு உத்தரவால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டாலும், பெரும் இன்னல்களைச் சந்தித்தது குடிபெயர்ந்த தொழிலாளர்களாகவே இருப்பர். பிழைக்க வந்த ஊரில் ஊரடங்கால் தொழில் செய்ய முடியாமல் அடுத்த வேளை உணவுக்கே அல்லல்பட்டு, ”எங்களை எப்படியாவது சொந்த மாநிலத்திற்கு கொண்டுசென்று விட்டு விடுங்கள்” என்ற அவர்களின் அவலக்குரல் நம் காதை விட்டு நீங்கவில்லை. அவர்கள் அலைமோதியது கண்ணை விட்டு அகலவில்லை. கால்நடையாகச் சென்ற சிலர் ஊர் போய் சேர்வதற்கு முன்பே பிணமாகிப் போனதை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது.
மே 1ஆம் தேதிக்குப் பின் சிறப்பு ரயில்களின் மூலம் பெரும்பாலான குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பிவிட்டாலும், ஒருசிலர் கையிலிருந்து காசை செலவழித்துவிட்டு, செய்வதறியாமல் திகைத்து நின்றனர். சொந்த ஊருக்குச் செல்லவும் முடியாமல், இங்கே இருக்கவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாக பரிதவித்தனர்.
அவர்களில் ஒருவர்தான் தஞ்சாவூரில் வேலை பார்த்துவந்த மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்த சோனு. இவர் குடும்பத்துடன் அங்கு தங்கி செல்போன் டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டுவந்துள்ளார். இச்சூழலில், கரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் சோனு வேலையிழந்துள்ளார்.
வேலை இல்லாவிட்டாலும், வயிற்றுக்கு சோறு வேண்டும் அல்லவா? அதனால் தான் சேமித்துவைத்திருந்த பணம் அனைத்தையும் சோனு செலவழித்துவிட்டார். இதனிடையே அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. மேற்கொண்டு செலவு செய்ய பணம் இல்லாமல் தவித்த அவர், குழந்தைகளுக்கு பால் கூட வாங்கி கொடுக்க முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். தன்னுடைய நிலை குறித்து பெங்களூருவில் இருக்கும் தனது சகோதரரிடம் சோனு கூறியுள்ளார்.
அவர் சோனுவை பெங்களூருவுக்கு அழைத்துள்ளார். சகோதரரின் அழைப்பின் பேரில் பெங்களூரு செல்ல முடிவெடுத்த சோனு, தன்னுடைய மனைவியையும் பிறந்து 15 நாள்களே ஆன குழந்தையையும் ஒன்றரை வயதான மற்றொரு குழந்தையையும் தஞ்சாவூரிலிருந்து அழைத்துக் கொண்டு கரூர் வழியாக நடந்துவந்துள்ளார்.
கால்நடை பயணமாக நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூருக்கு வந்தபோது, கைக்குழந்தையுடன் அவரது மனைவியைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் மாவட்டத்தின் எல்லையிலுள்ள சோதனைச்சாவடியில் அவரை நிறுத்தி காவல் துறையினர் விசாரித்துள்ளனர்.
விசாரணையில் தன்னுடைய நிலை குறித்து காவல் துறையினரிடம் அவர் விளக்கியுள்ளார். சோனு கூறியதைக் கேட்டு மனமிறங்கிய காவல் துறையினர் அவரை குடும்பத்தோடு பெங்களூருவுக்கு வழியனுப்பி வைப்பதாக உறுதியளித்துள்ளனர். தற்போது அதற்கான முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.