நாமக்கல் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, குடியிருப்பு கட்டடம் ஆகியவை 270 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணிகளுக்கு சத்தியமூர்த்தி & கோ நிறுவனம் 150 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தங்களை பெற்று பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
60 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மருத்துவக் கல்லூரிக்கு இரண்டாம் தளம் கட்டும் பணி நேற்று (அக்.29) இரவு நடைபெற்றது. கான்கீரிட் தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்றபோது, அங்கிருந்த தூண் இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் பணியிலிருந்த வட மாநில தொழிலாளர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உடனே அவர்கள் நாமக்கல் மற்றும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து விபத்து குறித்து முழுமையாக விசாரணை நடத்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர். மேலும் விபத்து குறித்து நல்லிபாளையம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இக்கட்டுமான பணியை செய்துவரும் சத்தியமூர்த்தி & கோ நிறுவனத்தின் உரிமையாளரின் வீடு மற்றும் அலுவலகங்களில் மூன்றாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முன்னாள் எம்பிக்கு சொந்தமான 5 மாடி கட்டடம் இடிந்து விபத்து!