தமிழ்நாட்டில் கடந்தாண்டு சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோள பயிரில் அதிகளவு அமெரிக்கன் படை புழு தாக்கியது. இதனால் மக்காச்சோள பயிர்கள் முற்றிலும் சேதமடைந்து விவசாயிகளுக்கு அதிகளவு நஷ்டம் ஏற்பட்டது.
இதனையடுத்து விவசாயிகள் பலர் மக்காச்சோளம் பயிரிடுவதை கைவிட்டனர். ஆனாலும், மக்காச்சோளத்தின் கிராக்கி குறையவில்லை. ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்ற மக்காச்சோளம் தற்போது 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதனைத் தவிர்க்கும் விதமாக வேளாண்மை துறை சார்பில் நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில மக்காச்சோள பயிர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தொடங்கிவைத்தார்.
இதில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் சாத்தையா, முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மக்காச்சோள பயிர் பாதுகாப்பு முறைகள், மக்காச்சோளத்தைப் படை புழு தாக்கத்தில் இருந்து எவ்வாறு காப்பது என்பது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.
இக்கருத்தரங்கில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.