ஐதராபாத்: இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நிறைவடைந்ததை அடுத்து டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
முதலாவது டெஸ்ட் போட்டியில் மொத்தம் 30 ஓவர்கள் பந்துவீசிய பும்ரா 72 ரன்கள் விட்டுக் கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பின்னர் பும்ரா மீண்டும் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராக முன்னேறி உள்ளார். அவரைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க வீரர் கஜிசோ ரபடா, ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
The Numero Uno in the ICC Men's Test Bowler Rankings 🔝
— BCCI (@BCCI) November 27, 2024
Jasprit Bumrah 🫡 🫡
Congratulations! 👏👏#TeamIndia | @Jaspritbumrah93 pic.twitter.com/mVYyeioOSt
மற்றொரு இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தரவரிசையில் 3 இடங்கள் முன்னேற்றம் கண்டு 25வது இடத்தில் நிலை கொண்டுள்ளார். பெர்த் டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 161 ரன்கள் குவித்தார். பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்திலும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் மற்றொரு இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் முறையே 3 மற்றும் 4வது இடங்களிலும் உள்ளனர்.
பெர்த் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் 89 ரன்கள் குவித்ததை அடுத்து ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் டாப் 10 வரிசைக்குள் நுழைந்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய விராட் கோலி தரவரிசையில் 9 இடங்கள் முன்னேற்றம் கண்டு 13வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் வங்கதேச கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் மூன்று இடங்கள் முன்னேற்றம் கண்டு டாப் 3 வரிசையில் இணைந்துள்ளார். இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களை தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: ரிஷப் பன்ட் சம்பளம் ரூ.27 கோடி இல்ல.. வரி பிடித்தம் போக எவ்வளவு வாங்குவார் தெரியுமா?