கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் பொதுப்போக்குவரத்துகள் முடக்கப்பட்டன. அதுமட்டுமின்றி, மாவட்ட, மாநிலங்களுக்கிடையேயான எல்லைகள் மூடப்பட்டு, வெளியிடங்களிலிருந்து வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வந்தன.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம், பூனேவிலிருந்து கார்கோ லாரி மூலம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு கார்களை ஏற்றிவந்த லாரித் தொழிலாளர்கள் ஊரடங்கினால், நாமக்கல் மாவட்டம் பொம்மைகுட்டைமேடு பகுதியிலேயே நாற்பதிற்கும் மேற்பட்ட நாள்களாக தங்கியுள்ளதாக கவலைத் தெரிவித்தனர்.
தங்களிடம் இருந்த பணத்தைக் கொண்டு, கோதுமை மாவு உள்ளிட்ட உணவு பொருள்களை வாங்கி, ஒரு வேளையோ அல்லது 2 வேளையோ சாப்பிட்டு வருவதாகவும், தங்களுக்கு எந்தவிதமான உதவியும் கிடைக்காததால் உணவுப் பொருள்களை வாங்க பெரும் சிரமத்திற்குள்ளாவதாகவும் தெரிவிக்கின்றனர்.
தாங்கள் தங்கியுள்ள பகுதிக்கு அருகிலுள்ள மக்கள், தினசரி மூன்று குடம் நீர் அளிப்பதாகவும்; தங்களது மனைவி, குழந்தைகளைப் பிரிந்து இரண்டு மாதங்களாக தவித்து வருவதாகவும், ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டபின், லாரியில் உள்ள சரக்குகளை இறக்கி விட்டு சொந்த ஊருக்குச் செல்வதற்காக காத்திருப்பதாகவும் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: மருத்துவமனையில் தாய்... பராமரிக்க ஆளின்றி இறந்த தந்தை... உதவியின்றி தவிக்கும் சிறுவன்