கரோனா தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளன. இருப்பினும், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் நாமக்கல் காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் போலீசார் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நாமக்கல் மினி பேருந்து நிலையம் அருகே செயல்பட்டுவரும் டாஸ்மாக் கடையினை திறந்து, சட்டவிரோதமாக நள்ளிரவில் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து டாஸ்மாக் கடையில் இருந்து மது பாட்டில்களை எடுத்துச் சென்ற பார் பணியாளர் ஸ்ரீதரை கைது செய்து, அவரிடமிருந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான 864 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஸ்ரீதரிடம் நடத்திய விசாரணையில், கடை விற்பனையாளர் முருகேசன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் தொடர்ந்து சட்ட விரோதமாக அரசு நிர்ணயம் செய்த 110 ரூபாய் மதுபாட்டில்களை 50 ரூபாய் கூடுதலாக பார் உரிமையாளருக்கு விற்பனை செய்வதும், அதை பார் உரிமையாளர் கள்ளச் சந்தையில் 250 முதல் 300 ரூபாய் வரையிலும் விற்பனை செய்ததும் தெரியவந்திருக்கிறது.
இதனையடுத்து மதுபான கடையின் பூட்டை உடைத்து மது விற்பனையில் ஈடுபட்ட முருகேசன் (எ) நீதிநாயகம், பார் உரிமையாளர் வீராங்கன் ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனாவால் மூடப்பட்ட வங்கி...!