மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் நேற்று (ஜன. 04) நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற இந்தப் பரப்புரை கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், "நான் பேசுவதற்கு வரிகளே இல்லை. என் தோழர் சொல்கிறார். கண்டிப்பாக மக்கள் நீதி மய்யம் தான் வெல்லும் என்று, அதை நான் சொல்லி மார் தட்டுவதைவிட, நீங்கள் சொல்லி என் முதுகை தட்டிக் கொடுத்தால் இன்னும் ஆனந்தமாக இருக்கும். எங்கு பார்த்தாலும் ஆசீர்வதிக்கும் கரங்களும், வெற்றி நிச்சயம் என்று சமிஞ்கை சொல்லும் கரங்களும் எனக்கு தெரிந்து கொண்டிருக்கிறது.
தாய்மார்கள், குழந்தைகள் எல்லோரும் எனக்கு வெற்றி நிச்சயம் என்கிறார்கள். நானும் உங்களை நம்ப தயாராகி விட்டேன். தமிழ்நாடு மாற்றத்துக்கு தயாராகி விட்டது. அதற்கான எல்லா சான்றுகளும் இங்கு தெரிகின்றன.
மக்கள் நீதி மய்யத்தில் மாலைகள் கிடையாது, பொன்னாடைகள் கிடையாது. காலில் விழும் பழக்கமும் கிடையாது. தமிழ்நாட்டை சீரமைப்பதில் ஒவ்வொரு ஊருக்கும், ஒவ்வொரு தமிழனுக்கும் பங்கு இருக்க வேண்டும்.
ஊழல் ஊழல் என, நாம் யார் மீதும் பழிபோட்டுக் கொண்டு இருக்காமல், வழிகாட்டும் அரசியலை உருவாக்குவோம். அதற்கான நேரம் வந்துவிட்டது. மீண்டும் வாக்குறுதியுடன் செல்கிறேன். இத்தனை பலமும் எனக்கு இருந்தால், என் கையை பலப்படுத்தினால் நாளை நமதே நிச்சயம் நமதே" எனக் கூறினார்.
இதையும் படிங்க: 'மாற்றத்தை மக்கள் நீதி மய்யம் உருவாக்கும்' - கமல்ஹாசன்