நல்வினை விஸ்வராஜ் என்ற வழக்கறிஞர், மே 31ஆம் தேதி இரவு ஒன்பது மணியளவில், இராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
இதனிடையே, இராசிபுரம் காவல்நிலையத்தின் அருகே தட்டச்சு அலுவலகம் வைத்துள்ள கோபால் என்பவர், வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜின் அலுவலகத்திற்கு வந்து, போக்குவரத்து காவலர் சதீஷ்குமார் என்பவர் உட்பட ஆறுபேர் பேர் தன்னை தாக்குவதாக வழக்கறிஞரிடம் கூறியுள்ளார்.
அப்போது, வழக்கறிஞரின் அலுவலகத்திற்கு வந்த அந்த கும்பல் கோபாலை தாக்கியுள்ளனர். அதனைத் தட்டிக்கேட்கச் சென்ற வழக்கறிஞரையும் அந்த கும்பல் இரும்பு கம்பியைக் கொண்டு தாக்கியுள்ளது.
இதுகுறித்து வழக்கறிஞர் அளித்த புகாரின் பேரில், இராசிபுரம் காவல் துறையினர் போக்குவரத்து காவலர் சதீஷ்குமாரின் கூட்டாளிகளை கைது செய்தனர். சதீஷ்குமார் தற்போது தலைமறைவாக உள்ளார்.
தற்போது, தலைமறைவாக உள்ள போக்குவரத்து காவலர் சதீஷ்குமாரை விரைவில் கைது செய்ய வலியுறுத்தி நாமக்கல்லில், நேற்று (ஜூன் ஆறு) ஒருநாள் முழுவதும் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால், நாமக்கல் நீதிமன்றம் வெறிச்சோடி காணப்பட்டது.