நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டமலை பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா. இவர் ஈரோடு மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் பணிக்குச் செல்லும்போது, தனது ஆறு வயது மகள் இன்சிகாவை அழைத்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்பகுதியிலுள்ள சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையை கடப்பதற்கு நின்ற நிலையில், பள்ளி பேருந்து ஒன்று சாலையைக் கடந்தது. அச்சமயத்தில் சாலையின் ஒருபுறத்தைக் கவனிக்காமல், இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த லாரி சித்ரா சென்ற இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய சித்ராவும், அவரது ஆறு வயது மகளும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். சிறிய கவனக் குறைவால் நொடிப்பொழுதில் தாயும் மகளும் விபத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இதுகுறித்த கண்காணிப்பு படக்கருவிக் காட்சிகள் இணையதளத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.