நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. இதனை தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா உள்ளிட்ட அமைச்சர்களும் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு 500 காளைகளும் 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். முன்னதாக வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மூன்று சுற்றுகளாக நடைபெறும் இந்தப் போட்டியை காண ஏராளமான பொதுமக்கள் வந்துள்ளனர்.தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரருக்கும், சிறந்த காளைக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டு போட்டியின் பாதுகாப்பு பணிக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.