தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல்.18 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, முக்கிய அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இந்நிலையில், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி, திமுக கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து, அக்கட்சியின் வேட்பாளராக ஏ.கே.பி.சின்ராசு அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், நாமக்கல் திமுக அலுவலகத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் மத்திய இணையமைச்சர் காந்திசெல்வன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுசெயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராசு-வை தொண்டர்களுக்கு அறிமுகம் செய்தனர்.
பின்னர் கூட்டத்தில் பேசிய ஈஸ்வரன், 'இனிவரும் காலங்களில் திமுக-வுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும். சின்ராசுவை தங்கள் கட்சி வேட்பாளராகக் கருதாமல் திமுக வேட்பாளராகவே கருத வேண்டும். பத்திரிகை மற்றும் ஊடகங்களில், கொங்கு மண்டலம் அதிமுக-வின் கோட்டையாக உள்ளது எனக் கூறி வருகின்றனர். இதனை வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் திமுக கூட்டணியின் கோட்டையாக மாறும்' எனப் பேசினார்.