நாமக்கல்லில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நகர பொதுக்குழு கூட்டம் அதன் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் இன்று நடைபெற்றது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”சசிகலா களத்தில் இறங்கினால் அதிமுகவில் மிகப்பெரிய சலசலப்புகள் நடக்கும். அதனால்தான் அமைச்சர்கள் பதற்றமடைந்துள்ளனர். அதன் விளைவாகத்தான் அதிமுக அமைச்சர்கள் 2 முறை காவல் துறை தலைமை இயக்குனரை சந்தித்துள்ளனர்.
விவசாயிகளின் கூட்டுறவு சங்க கடனை தள்ளுபடி செய்துள்ளதை வரவேற்கிறேன். விவசாயிகளின் அனைத்துக் கடன் 20 ஆயிரம் கோடி ரூபாயாகும். திமுக தலைவர் இதனை அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு 12 ஆயிரம் கோடி ரூபாய்தான் தள்ளுபடி செய்துள்ளது. இதில் முழுமையாக அனைத்து விவசாயிகளும் பயன்பெற வாய்ப்பில்லை.
விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் ரத்து செய்திட வேண்டும். காவிரி, திருமணிமுத்தாறு நதிகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 11,12ஆம் தேதி அரசியல் பேரணி நடத்தவிருக்கிறோம். விவசாயிகள் விளை நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்கும் போது அரசின் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி இழப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு முறையாக வழங்க வேண்டும்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ளவர்களுக்கு 20விழுக்காடு உள் ஒதுக்கீடு வேண்டும் என பாமக கேட்டுக்கொண்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மீதி இருக்கிற சாதியினரையும் அதன் பிரதிநிதிகளையும் கேட்டுதான் அரசு முடிவெடுக்க வேண்டும்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள ஒரு சமுதாயத்திற்கு மட்டும் பேச்சுவார்த்தை நடத்தி இட ஒதுக்கீடு கொடுத்தால் மற்ற சமுதாயங்கள் பாதிக்கப்படுவார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள அனைத்து சாதியினரையும் சமுதாயத்தினரையும் கருத்துக்களைக் கேட்டு தான் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’என தெரிவித்தார்.
இதையும் படிங்க:சசிகலா நாளை தமிழ்நாடு வருகை: வேலூரில் அமமுகவினர் வைத்த போனர்கள் அகற்றம்!