நாமக்கல்: நாமக்கல்லைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் பிரபல சிவில் காண்ட்ராக்டராக பணியாற்றி வருகிறார். இவர் சத்தியமூர்த்தி அண்ட் கோ என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு இந்த கட்டுமான நிறுவனம் இயங்கி வருகிறது.
இவர் அரசு மருத்துவக் கல்லூரி, தமிழக அரசின் குடிநீர் திட்டங்கள், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், வீட்டு வசதி வாரியம் உள்ளிட்ட அரசுப் பணிகளை டெண்டர் மூலம் ஒப்பந்தம் எடுத்து, கட்டுமானப் பணிகளை பல ஆண்டுகளாக செய்து வருகிறார்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இவரது நிறுவனம் சார்பில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாமக்கல், திருப்பூர் மற்றும் ஊட்டி ஆகிய பகுதிகளில் தற்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் கட்டுமானப் பணிகள் இவரது நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சத்தியமூர்த்தி வசித்து வரும் நாமக்கல் அழகு நகரில் உள்ள அவரது வீடு மற்றும் முல்லை நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை 11 மணி முதல் தொடங்கிய இந்த சோதனையில் சொத்து ஆவணங்கள், கணக்கு நோட்டுகள், டைரிகள், லேப்டாப்கள் ஆகியவை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது.
சி.ஆர்.பி.எப் காவல் துறையினரின் பாதுகாப்புடன் நடந்து வரும் இந்த சோதனையில், ஏதேனும் ஆவணங்கள் அள்ளது ரொக்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல்கள் சோதனையில் முடிவில் தெரிய வரும்.
இது மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கோவை, மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரியல் எஸ்டேட் மற்றும் சிவில் காண்ட்ராக்டர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த திடீர் சோதனை தொழிலதிபர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.