நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் மெகராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மின் துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து கூட்டுறவுத்துறை அமைச்சகம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.
அமைச்சர் தங்கமணி, அமைச்சர் சரோஜா பங்கேற்ற ஆய்வுக்கூட்டம்! தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, 'நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களாக கரோனா பாதிப்பு ஏதுமில்லை. மாவட்டத்தில் நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்கள் ஏதுமில்லை. மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு முதல் 6 மாதங்களுக்கு வட்டியில்லா கடனாக ஒவ்வொரு குழுவினருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் கடனுதவி வழங்கி வருவதாக' அறிவித்தார். மேலும் அமைச்சர் தங்கமணி, 'நாமக்கல் அதிமுக எம்.எல்.ஏ பாஸ்கர் மீது திமுக எம்.பி சின்ராஜ் பொய்யான குற்றச்சாட்டை முன் வைப்பதாகவும், அவர் தவறான முறையில் குடிநீர் இணைப்பைப் பெற்றுள்ளதாக எம்.பி குற்றம்சாட்டியதில் எவ்வித உண்மையும் இல்லை எனவும்; தவறான தகவல்களை அதிகாரிகள் வழங்கியிருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது புகார் தெரிவித்தால், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
அதேபோல், 'மக்களுக்குச் சேவை செய்பவர் மீது தேவையில்லாமல் குற்றச்சாட்டு வைக்கும் போது உணர்ச்சி வசப்படுவது இயல்பு தான் எனவும், நாமக்கல் மாவட்டத்தில் கரோனாவினால் ஒருவர் கூட இறக்கவில்லை எனவும்; தாங்கள் தொடர்ந்து மக்கள் பணி செய்து வருவதாகவும், தேவையில்லாமல் சிலர் குற்றச்சாட்டுகளை' கூறுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.