நாமக்கல்லைச் சேர்ந்த அரசு கட்டுமான ஒப்பந்ததாரர் சத்தியமூர்த்தி. இவரது மகன்களான அரவிந்தன் மற்றும் ஆனந்தவடிவேல் ஆகியோர் சத்தியமூர்த்தி அண்ட் கோ என்ற பெயரில் அரசு ஒப்பந்த பணிகள் எடுத்து மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் மேம்பாலங்கள் கட்டடங்கள் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரி கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வருமான வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரையடுத்து இவர்களது வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 28ஆம் தேதி முதல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
சென்னை மற்றும் மதுரையை சேர்ந்த அலுவலர்கள் 5 குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டு வந்தனர். மூன்று நாள்களாக நடைப்பெற்று வந்த சோதனை இன்று (அக்.31) அதிகாலை முடிவடைந்தது.
வரி ஏய்ப்பு புகாரில் நடத்தப்பட்ட சோதனையில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் மற்றும் தொழிலாளர்களுக்கு செய்த செலவீனங்கள், பொருள்கள் வாங்கப்பட்டதற்கான கணக்குகளில் வரி ஏய்ப்பு செய்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அலுவலர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.