நாமக்கல் அடுத்த காவேட்டிபட்டி குப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜவேல். இவர் அப்பகுதியிலேயே வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கடை வைத்துள்ளார். இவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி சுஜிதா என்ற மனைவியும் உள்ளார்.
இந்நிலையில் ராஜவேலுக்கும், சுஜிதாவுக்கும் குடும்ப பிரச்னை தொடர்பாக அடிக்கடி தகராறு நடைபெற்று வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து இன்று காலை இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது, அப்போது ராஜவேல் வீட்டிலிருந்த பேனா கத்தியை எடுத்து சுஜிதாவை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.
இதனைக்கண்ட அருகிலிருந்தவர்கள் சுஜிதாவை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கழுத்தில் காயமடைந்த சுஜிதாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். மனைவியை கொலை செய்ய முயற்சித்த ராஜவேலுவை நாமக்கல் காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.