நாமக்கல்லில் வேளாண் நிலத்தில் உயர்மின் கோபுரங்கள் அமைத்த பிறகு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை எனத் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த சில நாள்களாக பள்ளிபாளையத்தில் உள்ள மின் துறை அமைச்சர் தங்கமணியின் வீட்டை முற்றுகையிட்டுவந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகளுடன் உயர்மின் கோபுர விவகாரம் குறித்து நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள பயணியர் மாளிகையில் அமைச்சர் தங்கமணி ஒரு மணி நேரமாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தங்கமணி, "விவசாயிகள் 765 கிலோவாட் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணியைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கைவைத்தனர். இதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்றதையடுத்து, முதலமைச்சரின் உத்தரவின்படி நாளைமுதல் (பிப். 8) உயர்மின் கோபுரம் அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் விவசாயிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லாமல் சென்றுவிட்டனர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்துதான் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகள் தொடங்கின. இதற்கு ஆயிரக்கணக்கான விவசாயிகள் இழப்பீடு பெற்றுவிட்டனர். நீதிமன்றத்தில் வழக்கு முடியும்வரை உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெறாது.
800 கிலோவாட் மின்சாரத் திட்டத்தில் போதுமான விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தடையில்லா மின்சாரம் தமிழ்நாட்டில் உள்ள நிலையில், எதிர்காலத்தில் தொழில் நிறுவனங்கள், விவசாயத்திற்கு என்று பல்வேறு பணிகளுக்காக மின்திட்டம் கொண்டுவரப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
இருப்பினும் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி விவகாரத்தில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் பாதுகாப்புச் சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதையும் படிங்க: எமரால்டு அணையில் குளிக்க சென்றவர் உயிரிழப்பு