நாமக்கல்: நாமக்கல் (தெற்கு) அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் தலைமையில் திங்கள்கிழமை (12.04.21) நடைபெற்றது.
கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில், வருகின்ற 16ஆம் தேதி 12ஆம் வகுப்புகளுக்கு செய்முறைத் தேர்வுகள் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் குறித்து கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது. அப்போது கூட்டத்தில் பேசிய நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், “மாவட்டத்தில் 151 மையங்களில் செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ளன. காலை 10 மணிக்கு நாமக்கல் கல்வி மாவட்டத்திலும், பகல் 2 மணிக்கு திருச்செங்கோடு கல்வி மாவட்டத்திலும் தேர்வு நடைபெறும்.
அப்போது இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல், நர்சிங் தொழிற்பயிற்சி உள்ளிட்ட பிரிவுகளில் மாணவ மாணவிகள் செய்முறை செயல்களில் ஈடுபட உள்ளனர். தற்போது கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் மாணவ- மாணவிகள் முகக்கவசம், கையுறை அணிந்து, தகுந்த இடைவெளியோடு செய்முறை தேர்வு செய்வதற்கு பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. செய்முறை ஆய்வகம் நல்ல காற்றோட்ட வசதியுடன் இருக்க வேண்டும். தேவையான முகக்கவசம், கையுறை, கிருமிநாசினிகள் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். அதன்படி அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்முறைத்தேர்வு ஏற்பாடு செய்து நடத்திட வேண்டும்” என்றார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். நாமக்கல் மாவட்டத்தில் 202 தேர்வு மையங்களில் 20,236 மாணவ-மாணவிகள் 12ஆம் வகுப்பு தேர்வு எழுத உள்ளனர்.