நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள திருமலைப்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தேக்கு, வேம்பு, புங்கன், வாதனை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன.
இந்நிலையில் இன்று(டிச.7) தலைமையாசிரியர் ஆறுமுகம், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் பொன்னுசாமி ஆகியோர் பள்ளியில் இருந்த சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட மரங்களை அரசின் உரிய அனுமதியின்றி வேரோடு வெட்டி எடுத்ததாக அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், கரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மரங்களை வெட்டியது தெரியவந்துள்ளது. மரங்கள் நட வேண்டும் என மாணவர்களுக்கு போதிக்கும் ஆசிரியரே மரங்களை வெட்டியது அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகமும் பள்ளிக் கல்வித் துறையினரும் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தணிக்கையின்போது விபத்து: பேரிகார்டு மோதியதில் காவலர் மரணம்