அனைத்துத் துறை வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் மாநில மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலத் துறை அமைச்சர் சரோஜா மற்றும் நாமக்கல் எம்.பி. சின்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் காவல் துறையினர் சார்பில் சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி, ஓவிய போட்டி மற்றும் குறும்படம் ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை அமைச்சர்கள் தங்கமணி மற்றும் சரோஜா ஆகியோர் வழங்கினர்.
மேலும் கிருத்திகா என்ற பொறியியல் மாணவி கான்கிரீட்டை பயன்படுத்தி காற்று மாசுபடுதலை குறைக்கும் வழிமுறையை கண்டறிந்துள்ளார். அவர் மேற்கொள்ளப்படும் ஆய்விற்கு தேவையான நிதி உதவியை அமைச்சர் தங்கமணி வழங்கினார்.
இதனை தொடர்ந்து ஆய்வுக்கூட்டத்தில் பேசிய நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ்:
"அனைத்துத் துறை அலுவலர்களும் தங்களது பணியை கண்ணியத்துடன் மேற்கொள்ள வேண்டும். ஒரு சில கிராமங்களில் பொதுமக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர், தெரு விளக்கு மற்றும் சாலை வசதிகள் இல்லை. ஆனால் அதிகாரிகள் தங்களது துறை சார்ந்த பணிகளை 98 சதவீதம் பூர்த்தி செய்ததாக அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். எனவே அரசு அதிகாரிகள் உண்மையுடன் பணியாற்ற வேண்டும்.
மேலும் பல படித்த பட்டதாரி இளைஞர்கள் வேலையின்றியும் குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர். ஆனால் அரசு அதிகாரிகளுக்கு லட்ச கணக்கில் சம்பளம் அளித்தும் பணியை சரியாக மேற்கொள்ளாமல் இருக்கின்றனர்.
வருங்காலங்களில் அரசு துறை அலுவலர்கள் தங்களது தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்". இந்த ஆய்வுக்கூட்டத்தில் அரசின் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: