நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தின்னனூர் நாடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சாமிதுரை. இவர் கடந்த அக். 6ஆம் தேதி தேவனூர் நாடு பகுதியில் முகம் சிதைந்து, உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக அப்பகுதி மக்கள் வாழவந்தி நாடு காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இது குறித்து, தற்போது நடத்திய விசாரணையில் அவரது மருமகன்கள் இரண்டு பேர் உள்பட ஐந்து பேர் சேர்ந்து சாமிதுரையை மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தது தெரியவந்தது.
சாமிதுரை கடந்தாண்டு நிலம் விற்ற பணத்தை தனது குடும்பத்தாருக்குத் தராமல், அவரே வைத்துகொண்டு செலவு செய்ததாகவும், இதனைக் கேட்டதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து, அவர்கள் ஐந்து பேரையும் கைது செய்த காவல் துறையினர் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய இருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கொலை வெறியோடு அரிவாளுடன் விரட்டிய நபர்!