வெப்ப மண்டலம், மித வெப்ப மண்டலம், குறைந்த மழையளவு கொண்ட பகுதிகளில் நன்கு வளரக்கூடிய ஒரு பணப்பயிர் மரவள்ளி கிழங்கு. அதிகம் செலவு பிடிக்காத இப்பயிரினை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் 10 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிட்டுள்ளனர். இந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக மரவள்ளி கிழங்குக்கு போதிய தண்ணீர் கிடைக்காததால் நல்ல விளைச்சல் கிடைத்து வருகிறது.
இந்த மரவள்ளி கிழங்கின் மாவில் இருந்து ஸ்டார்ச், ஜவ்வரிசி உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு மட்டுமின்றி வட மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் விலை போன நிலையில் தற்போது விலை மிக குறைந்து 5 ஆயிரம் ரூபாய் முதல் 6 ஆயிரம் ரூபாய்வரை மட்டுமே விலை போகிறது.
ஸ்டார்ச், ஜவ்வரிசி உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் மரவள்ளி கிழங்கிற்கு பதிலாக சட்ட விரோதமாக கலப்படம் செய்வதே காரணம் என்கின்றனர். உணவு பாதுகாப்பு துறையினர் கலப்படத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பதோடு மரவள்ளி கிழங்கிற்கும் குறைந்த பட்ச ஆதார விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.