நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு பணியாளர் ஒருவர் புதிய வகை அழகு ரக கோழிகளை வளர்த்து விற்பனை செய்துவருகிறார். மோகனூரைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவர் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணியாற்றி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்றார். இவர் தன்னுடைய ஓய்வுக்காலங்களை போக்குவதற்கு பேன்சி ரக கோழிகளை வளர்த்து விற்பனை செய்துவருகிறார்.
இந்த கோழிகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதனால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் இந்த பேன்சி ரக கோழிகள் மேல் ஆர்வம் காட்டுகின்றனர். இவரிடம் போலீஸ் கேப், டேபுள் ஃபைட், ஜப்பான் பேந்த், கொச்சின் பேந்த், சுருளி, சைனா சிமிக்கி, சேப்ரேட்டர், ராமர் மற்றும் கடக்நாத் போன்ற ரகங்கள் இருக்கின்றன.
இதில் குறிப்பாக கடக்நாத் இன ரக கோழிகள் சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக தொற்றுக்களை சரிசெய்யும் மருத்துவக் குணமாகும். இந்த கோழியின் இறைச்சியானது கிலோ 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் கறியும், ரத்தமும் கருப்பு நிறத்தில் காணப்படுவதால் பெரும்பாலானோர் இதனை விரும்புவதில்லை. இவை பெரும்பாலும் வெளிநாடுகளில் வளர்க்கப்படுபவை. முதலில் மூன்று கோழிகளுடன் வளர்க்க ஆரம்பித்த குப்புசாமி தற்போது முந்நூறு கோழிகளை வளர்த்து வருகிறார்.
இதுகுறித்து குப்புசாமி கூறுகையில் "முதலில் தான் ஓய்வுபெற்ற பிறகு தன்னுடைய ஓய்வுக் காலங்களை போக்குவதற்கு வளர்த்து வந்ததாகவும், பின்னாளில் அதன் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக அதனையே தொழிலாக செய்துவருவதாகவும் தெரிவித்தார். இந்த கோழிகள் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள்போல் தன்னுடைய சொல்லிற்கு கட்டுப்படுகிறது. இதனால் மனதிற்கு ஒருவித அமைதி ஏற்படுகிறது. இந்த ஃபேன்சி ரக கோழிகள் விற்பனை செய்வதில் மாதம் 10 ஆயிரம் ரூபாய் வரை லாபம் ஈட்ட முடிகிறது" என்றார்.