தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்றை தடுக்க தமிழ்நாடுஅரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒருபகுதியாக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாவட்டந்தோறும் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
அந்தவகையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனோ தொற்று கட்டுப்படுத்துவது குறித்து சுகாதரத்துறை அமைச்சரும் செயலாளரும் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் சட்டப்பேரவை உறுப்பினருமான தங்கமணி கலந்துகொண்டார்.
இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தங்கமணி கூறியதாவது, "நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு போதுமான படுக்கை வசதிகளும் ஆக்ஸிஜன் வசதிகளும் இல்லாமல் உள்ளது. இதனை தமிழ்நாடு அரசு அதிகரிக்க வேண்டும். கருப்பு பூஞ்சைக்கும் போதுமான மருந்துகள் கிடைப்பதில்லை. எனவே மருந்துகள் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியின் கட்டுமான பணிகளை விரைந்து முடித்து அங்கு மருத்துவமனையை செயல்படுத்தி கரோனா நோயாளிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். அதே போல் தமிழ்நாடு முழுவதும் சில தளர்வுகள் இன்று முதல் நடைமுறையில் உள்ளது. தற்போது கரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், அரசு அறிவித்துள்ள தளர்வுகளால் மீண்டும் தொற்று வேகமாக பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு அறிவித்துள்ள தளர்வுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.