நாமக்கல் : மின்சார வாரியம் உள்ளிட்ட எந்தத் துறையும் தனியார்மயம் ஆக்கப்படாது. மேலும் மின்வாரிய அலுவலகங்களில் 50 விழுக்காடு காலிப்பணியிடங்கள் உள்ள இடங்களில் மட்டுமே அவுட் சோர்சிங் முறையில் பணி அமர்த்தப்படும் என மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின் துறை அமைச்சர் தங்கமணி டிசம்பர் 17ஆம் தேதி நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "கேங்மேன் பணியிடங்களுக்கு 10 ஆயிரம் பேர் தேர்வுசெய்யப்பட்ட நிலையில் பணி நியமனம் தொடர்பாகத் தொழிற்சங்கங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதால் 10 ஆயிரம் பேரையும் பணி நியமனம் செய்ய முடியாத நிலை உள்ளது.
மின்சார வாரிய அலுவலகங்களில் 50 விழுக்காடு பணியாளர்களுக்கு மேல் காலியாக உள்ள இடங்களில் மட்டும் பணிகள் தொய்வில்லாமல் நடைபெற அவுட்சோர்சிங் முறையில் பணி அமர்த்தப்படும்.
எக்காரணத்தைக் கொண்டும் மின்சார வாரியம் உள்ளிட்ட எந்தத் துறையும் தனியார்மயமாக்கப்படமாட்டாது. தொழிற்சங்கங்கள் நீதிமன்றத்தில் உள்ள வழக்கைத் திரும்பப் பெற்றால் 10 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களுக்கும் பணி உடனடியாக வழங்கப்படும்.
பிரீபெய்டு மீட்டர் முறை அமல்படுத்தப்பட்டாலும் வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். அதேபோல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரமும் எக்காரணத்தைக் கொண்டும் ரத்துசெய்யப்படாது" எனத் தெரிவித்தார்
மேலும் பேசிய அவர், "நாடாளுமன்றத் தேர்தலின் அடிப்படையில் கூட்டணி அமைந்துள்ளது. பாஜக அதிகமான இடங்களை கேட்கிறது என்பது தவறான தகவல்கள், யூகங்களுக்குப் பதில் அளிக்க முடியாது. பரப்புரைக் கூட்டங்களில் கமல்ஹாசன் தொடர்ந்து எம்ஜிஆர் குறித்து பேசுவதால் அவர் ஒருபோதும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது" என்றார்.
இதையும் படிங்க: அரசியல் தியாகங்களில் ரஜினியும் கமலும் ஜீரோ - எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தாக்கு