நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள், அம்மாவட்டத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் தேர்தல் அலுவலரும், மாவட்ட வருவாய்க் கோட்டாட்சியருமான கோட்டை குமார் கலந்து கொண்டு பயிற்சி வகுப்புகளைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
அப்போது, தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எவ்வித பாரபட்சமும் இன்றி செயல்பட வேண்டும். தேர்தல் பயிற்சி வகுப்பில் வாக்குப் பதிவு இயந்திரங்களை எவ்வாறு கையாள வேண்டும், யாருக்கு வாக்களித்தோம் என்பதையும் கண்டறியும் விவிபேட் இயந்திரத்தின் செயல்பாடுகள், வாக்காளர்களுக்கு விரலில் எவ்வாறு மை வைக்க வேண்டும், வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்பும், வாக்குப்பதிவு முடிந்த பின்பும் இயந்திரத்தினை எவ்வாறு சீல் வைக்க வேண்டும் என்பது குறித்தும் விளக்கினார்.
ஒருபுறம் பயிற்சி நடந்தாலும், மறுபக்கம் பயிற்சி மேற்கொள்ள வந்த அரசு அலுவலர்கள் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமல், தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல், அரசு ஊழியர்கள் வகுப்புகளைக் கவனிக்காமல், தபால் வாக்குகளைச் செலுத்துவதிலும், மரத்தடியில் நண்பர்களுடன் அரட்டை அடித்தும் கொண்டிருந்தனர்.
பயிற்சி வகுப்புகளை முழுமையாகக் கவனிக்காமல் தேர்தல் பணிக்குச் செல்லும் அலுவலர்கள் அலட்சியமாக செயல்படுகின்றனர் எனப் பயிற்சி அளித்த அலுவலர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சேந்தமங்கலத்தில் பொதுமக்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்க டோக்கன் விநியோகம்!