நாமக்கல் மாவட்டத்தில் வாக்குச் சாவடிகளை மாற்றி அமைத்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுக்கான கூட்டம், மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று (அக். 19) நடைபெற்றது.
அப்போது வாக்குச் சாவடிகளை மாற்றி அமைத்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் கலந்துரையாடினார்.
மேலும், கரோனா தொற்றைத் தடுக்கும் இந்த கால கட்டத்தில் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகளை அரசு விதிகளின்படி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் மெகராஜ், "இம்மாவட்டத்திலுள்ள, 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் மொத்தமுள்ள ஆயிரத்து 621 வாக்குச் சாவடிகளில், ஆயிரத்து 500 வாக்காளர்களுக்குமேல் உள்ள வாக்குச்சாவடிகளைப் பிரித்து, புதியவாக்குச் சாவடிகள் அமைத்திடவும், வாக்குச்சாவடிகளாக அமைந்துள்ள கட்டடங்கள் பழுந்தடைந்ததன் காரணமாகவும், வேறுபயன்பாட்டிற்கு பள்ளிகளால் பயன்படுத்தப்படுவதாலும், அவற்றிற்குப் பதிலாக, வேறு கட்டடங்களைத் தேர்வு செய்திடவும் தேர்தல் ஆணையத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் மொத்தம் 45 வாக்குச் சாவடிகள் கட்டடம் மாற்றம், அமைவிட மாற்றம் மற்றும் பெயர் மாற்றத்திற்கு (Building / Locaton and Nomenculate Change) உட்படுவதால், இந்த மாறுதல்களுக்கு உரிய அனுமதிகோரி, தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைக்கப்படவுள்ளது" எனத் தெரிவித்தார்.
மேலும், 45 எண்ணிக்கையிலான வாக்குச் சாவடிகள் மாற்றியமைக்கவுள்ளது குறித்த விபரம், அரசியல் கட்சியினருக்குத் தெரிவிக்கப்பட்டு, அவர்களின் கருத்து ஆலோசனைகளை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். இந்தக் கூட்டத்தில், நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், பொது வருவாய்க் கோட்டாட்சியர்கள் மு. கோட்டைக்குமார், ப. மணிராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.