கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 21 காசுகளாக இருந்த நிலையில், கறிக்கோழி மற்றும் முட்டைகள் சாப்பிடுவதன் மூலம் கரோனா நோய் பரவுகிறது என சமூக ஊடகங்களில் பரவிய தவறான தகவல்களால் முட்டை மற்றும் கறிக்கோழி விலை வரலாறு காணாத அளவு வீழ்ச்சியடைந்தது.
பின்னர், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோரின் அறிவுறுத்தலால் மக்கள் படிப்படியாக மீண்டும் கோழிகளை உண்ணத்தொடங்கியுள்ளனர். இதனையடுத்து, நேற்று முன்தினம் முட்டை பண்ணை கொள்முதல் விலை 05 காசு அதிகரித்து, 3 ரூபாய் 55 காசாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
இதையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலையை 3 ரூபாய் 50 காசுகளில் இருந்து 5 காசுகள் உயர்த்தி 3 ரூபாய் 55 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
இதுகுறித்து கோழிப் பண்ணையாளர்கள் கூறும்போது, வரும் காலங்களில் முட்டை உற்பத்திகளின் தேவைக்கேற்ப விலை உயர்த்தப்படும் எனத் தெரிவித்தனர்.
இதேபோல் கறிக்கோழியின் விலை 7 ரூபாய் அதிகரித்து, ஒரு கிலோ 77 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வதந்திகளால் தாய்க்கோழிகள் அழிக்கப்பட்டதால் வரும் நாள்களில் கறிக்கோழியின் விலை உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.
இதனிடையே தமிழ்நாட்டில் இறைச்சிக் கடைகள் திறக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஒரே நேரத்தில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டதில் எவ்விதப் பாதிப்பில்லை- அமைச்சர் தங்கமணி!