நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 5 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்பட்டு, தினசரி நான்கு கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்த முட்டைகள் சத்துணவிற்கும், தமிழ்நாடு, கேரளா ஆகிய பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காகவும் அனுப்பி வைக்க்கப்படுகின்றன.
இந்நிலையில் தற்போது கேரளாவில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சல் காரணமாக, கொரோனா வைரஸ் வதந்திகள் காரணமாகவும் கோழி மற்றும் முட்டைகளின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. மேலும் நமக்கல்லில் இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 33 காசுகள் குறைத்து, 2 ரூபாய் 90 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இவ்விலையானது கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளதாக பண்ணை உரிமையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இது குறித்து உரிமையாளர்கள் கூறுகையில், 2015ஆம் ஆண்டு முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 2 ரூபாய் 90 காசுகளாக இருந்தது. தற்போது அந்த விலைக்கு முட்டை விற்பனையாகிறது” என்று தெரிவித்தனர்.
அதேசமயம், தற்போது தமிழ்நாட்டில் முட்டை உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், சத்துணவு, பிறமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யவிருந்த முட்டைகளும் தேக்கமடைந்துள்ளதால், மீண்டும் முட்டையின் விலை சரிவைச் சந்திக்கவுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:குமரியில் 10 ரூபாய்க்கு சிக்கன் 65 - கொரோனா வதந்திக்கு முற்றுப்புள்ளி!