நாமக்கல் அடுத்த பாப்பிநாயக்கன் ஊராட்சியில் வசிக்கும் 930 குடும்பங்களுக்கு, கரையாம்புதூர் கிராம முன்னேற்ற சங்கத்தின் சார்பில் முட்டைகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொது மக்களுக்கு 10 கிலோ அரிசி, ஒரு அட்டை முட்டைகள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் வழங்கினர்.
இதனைத்தொடர்ந்து நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது,"தமிழ்நாட்டு மக்களின் நலனே முக்கியம் என்பதால், ஏப்ரல் 30ஆம் தேதி வரை மதுக்கடைகள் திறக்கப்படாது.
ஊரடங்கு காரணமாக, தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளதால் தற்போது 6 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், வடமாநில தொழிலாளர்கள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ ஆயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டுவருகின்றன.
நாமக்கல்லில் கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக கண்காணிப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொது மக்களின் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் வீடுகள் தோறும் வருவாய்த் துறை மூலம் வழங்கப்படும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சரக்கு ரயில் சேவை ஏப் 25ஆம் தேதிவரை நீட்டிப்பு