'நாமக்கல்லில் புதிதாக சட்டக் கல்லூரி அமைக்கப்படும்' என தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 110விதியின் கீழ் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்திருந்தார். அதன்படி, தற்காலிகமாக நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள டான்சி காட்சியகத்தில் சட்டக் கல்லூரியானது செயல்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதை முன்னிட்டு தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம், நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் ஆகியோர் சட்டக் கல்லூரி அமையவுள்ள டான்சி காட்சியகத்தை பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் பேசிய முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
- புதிதாக அமையவுள்ள சட்டக் கல்லூரி தற்காலிகமாக டான்சி காட்சியகத்தில் செயல்படும். விரைவில் சட்டக் கல்லூரிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிரந்தரமாக அதற்கான நிலம் அமைக்கும் பணி நடைபெறும்.
- நீலகிரியில் கனமழையில் சிக்கிக்கொண்ட 60 மின்வாரிய தொழிலாளர்கள் இன்று காலை மாவட்ட வருவாய் துறை மற்றும் பேரிடர் மீட்பு குழு மூலம் மீட்கப்பட்டனர். விரைவில் நீலகிரி மாவட்டத்திற்கு மின்சாரம் வழங்கப்படும்.
- வேலூரில் திமுக வெற்றிபெறவில்லை அதிமுகதான் வெற்றிப்பெற்றது மேலும், வேலூரில் மூன்று இடங்களில் அதிமுக வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.