நாமக்கலில் நாளுக்கு நாள் போக்குவரத்து விதிமுறை மீறல் அதிகரித்து வருகிறது. இதனை தவிர்க்க தமிழக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் போக்குவரத்து விதிமுறை மீறல் உள்ளிட்ட குற்ற செயல்களுக்கு அபராதம் வசூல் செய்ய இ - சலான் முறையை அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, நாமக்கல் பூங்கா சாலையில் தொடங்கி வைத்தார். இந்த மின்னணு அபராத முறையின் மூலம், வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறும்போதும், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும்போதும் உடனடியாக அபராதம் வசூலிக்கவும், திருட்டு வாகனமாக இருந்தால் உடனடியாக கண்டறியவும் முடியும்.
இந்த இ-சலான் இயந்திரத்தின் மூலம் சாலை விதிமுறைகளை மீறுவோர், தங்களுடைய ஏடிஎம் அட்டை மூலமாகவும், ஏடிஎம் அட்டை இல்லாதோர், பாரத ஸ்டேட் வங்கியில் நேரடியாக சென்று வங்கி கணக்கு மூலம் அபராதத்தை செலுத்தலாம். அந்த நபர் வங்கியில் அபராத தொகையை செலுத்தவில்லை என்றால், அவரது ஓட்டுநர் உரிமம், வாகனத்தின் காப்பீடு போன்றவற்றை புதுப்பிக்க முடியாது. வசூலிக்கப்படும் அபராத தொகையானது தமிழக போக்குவரத்து துறைக்கு நேரடியாக செலுத்தப்படும்.
இதன்பின்னர் தலைகவசம் அணியாமல் சென்ற 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு அறிவுரை கூறியும் வருங்காலத்தில் தலைகவசம் அணியாமல் சென்றால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தார். இதுகுறித்து மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அருளரசு, நாமக்கல் மாவட்டத்தில் 25 காவல் நிலையங்களுக்கு புதிதாக மின்னணு அபராதம் செலுத்தும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் உடனடியாக அபராதம் வசூலிக்கப்படும். சாலை விதிகளை மீறும்போதுதான் விபத்துகள் ஏற்படுகிறது என்றார்.