ராசிபுரம் நகராட்சி பகுதியில் உள்ள 27 வார்டுகளில், வாரம்தோறும் இரண்டு நாட்கள் ஒருங்கிணைந்த சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படும் என அப்பகுதி ஆணையர் மா. கணேசன் தெரிவித்திருந்தார். அதன்படியே இன்று ராசிபுரம் புதிய பேருந்துநிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில், சுமார் 136 துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டு சுகாதாரப் பணியில் ஈடுபட்டனர். அதில் வீடுகள்தோறும் டெங்கு நோய் பரப்பும் கொசுக்கள் குறித்து சுகாதாரத் துறை அலுவலர்கள் சோதனை நடத்தி, நீர் தொட்டிகளில் அபேட் மருந்தை ஊற்றினர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தியதுடன், அப்பகுதியில் இருந்த முட்புதர்களையும் அகற்றினர்.
தொடர்ந்து, பேருந்து நிலையத்தில் இருந்த சாக்கடைகள் தூர்வாரப்பட்டபோது, தூர்வாரும் பணியில் இருபதிற்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபட்டனர். அப்போது, கையுறைகள் மற்றும் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் சாக்கடையில் இறங்கித் தங்களது கைகளைக்கொண்டே துப்பரவுப் பணியாளர்கள் சாக்கடையைத் தூய்மைப்படுத்திய அவலம் அரங்கேறியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். மேலும், நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நாமக்கல்லில்கனமழை... அக்கரைப்பட்டி ஏரி அணைக்கட்டு உடைப்பு!