நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் பங்கேற்று கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, குருசாமிபாளையம் பகுதியில் டிசம்பர் 13ஆம் தேதி மூதாட்டியை கொலை செய்த ரவுடியை பிடிக்க முயன்ற காவல் துறையினர் ஆசிட் வீச்சில் படுகாயமடைந்தனர்.
ஆசிட் வீச்சில் படுகாயமடைந்த புதுச்சத்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் முருகானந்தம், தலைமைக் காவலர் கார்த்திகேயன் ஆகியோருக்கு தமிழ்நாடு காவல் துறை இயக்குனரின் சிறப்பு நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவிக்கான காசோலையை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் வழங்கினர்.
பின்னர் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையிலிருந்து அனுப்பப்படும் நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒருசில இடங்களில் தனியார் மருத்துவமனைகளில் இருந்த குறைபாடுகள் களையப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் குறித்தும் அதற்கான இயற்கை மருத்துவம் உள்ளதாகக் கூறியும் ஒரு சிலர் சமூக ஊடகங்களில் தவறான செய்திகளை பரப்புகின்றனர்.
இதுபோன்று வாட்ஸ் அப்பில் வரும் தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம். கரோனாவுக்கு இயற்கை மருந்து என நம்பி ஆந்திர மாநிலத்தில் ஒருசிலர் தவறான காய்களை சாப்பிட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபோன்று தமிழ்நாட்டில் நடந்துவிடக்கூடாது. எனவே சமூகவலைதளங்களில் கூறப்படும் தவறான சிகிச்சை முறைகளை பின்பற்ற வேண்டாம்.
அந்தந்த அரசு மருத்துவமனைகளை அணுகி உரிய ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் பெற வேண்டும். தமிழ்நாட்டில் முதலமைச்சர், கரோனா வைரஸ் தடுக்கும் பணிகளுக்கும், சிகிச்சை பணிக்கும் மொத்தம்12 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசிடம் நிதி கேட்டுள்ளார்" என்றார்.
இதையும் படிங்க: வறுமையின் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் சந்திரலேகா நகர் மக்கள் - கருணை காட்டுமா அரசு?