கேரளாவில் பறவைக்காய்ச்சல் வேகமாகப் பரவிவருகிறது. தமிழநாட்டில் இந்த நோய் பரவாமல் இருக்கும்பொருட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் எடுக்கப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு கூட்டம் இன்று (ஜன. 06) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை, வனத் துறை மற்றும் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் மெகராஜ், "பறவைக்காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும் ஆய்வுமேற்கொள்ளவும் நாமக்கல் மாவட்டத்தில் 45 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களில் கால்நடை மருத்துவர்கள், உதவி மருத்துவர்கள் ஆகியோர் இடம்பெறுவார்கள்.
மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 250 கோழிப் பண்ணைகளில் உள்ள கோழிகளின் எச்சில், சளி, எச்சம் மாதிரிகளை எடுத்து ஆய்வகத்தில் பரிசோதனை மேற்கொண்டு, கோழிகளின் தன்மைகளை ஒரு வாரத்திற்குள் ஆராய்ந்து அறிக்கை தருமாறு இந்தக் குழுக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், கோழிகள் மற்றும் பறவைகள் அதிகளவு இறந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரளாவிற்குச் செல்லும் அனைத்து வாகனங்களையும் கிருமிநாசினி கொண்டு தெளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வனப் பறவைகள் மூலம் தொற்றுநோய் பரவக்கூடும் என்பதால் அதுவும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருகிறது. பறவைக்காய்ச்சல் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம்" என்றார்.