கரோனா ஊரடங்கால் 68 நாள்களுக்கு பிறகு இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் மண்டலங்களுக்கிடையே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய பணி மனைகளிலிருந்து சேலம், ஈரோடு, கோவை, கரூர் ஆகிய பகுதிகளுக்கு 133 அரசு பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன.
இந்நிலையில் நாமக்கல் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது போக்குவரத்துத் துறை அலுவலர்களிடம் பேருந்துகளில் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கவும் ஓட்டுநர், நடத்துநர் கட்டாயம் முகக்கவசம், கையுறை அணிந்து பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் பயணிகளிடமும், பேருந்துகளில் செல்லும்போது கரோனா அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக நடத்துனர் அல்லது ஓட்டுநரிடம் தெரிவிக்க வேண்டும் எனவும், முகக்கவசம் அணிந்து பேருந்துகளில் பயணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.