நாமக்கல்: சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சையாக தற்போதைய அதிமுக எம்.எல்.ஏ சந்திரசேகரன் போட்டியிடுகிறார். இவர் நேற்று (மார்ச் 31) தனது ஆதரவாளர்களுடன் எருமப்பட்டி, பவித்திரம், நவலடிப்பட்டி, வரகூர் கோம்பை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது எருமப்பட்டி கைக்காட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சண்முக சுப்பிரமணி தலைமையிலான அலுவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த பரப்புரை வாகனமான TN 88 B 5002 என்ற எண்ணிட்ட டாடா சுமோவை சோதனையிட்டதில், வாகனத்தில் இருந்த சாமி படம் போட்ட 12 ஆயிரம் டோக்கன்களை கைப்பற்றி, ஓட்டுநர் முகமது பைசலிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி அதன் மூலம் பரிசுப் பொருள்கள் வழங்கும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து டோக்கனைகளைப் பறிமுதல் செய்த தேர்தல் அலுவலர் எருமப்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல், சேந்தமங்கலம் அடுத்த வடுகப்பட்டி பகுதியில் சந்திரசேகரனின் ஆதரவாளர்கள் பொதுமக்களுக்கு டோக்கன் விநியோகம் செய்து கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது. இதனையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த அதிமுகவினர் டோக்கன்களைப் பறிமுதல் செய்து மேல் நடவடிக்கை எடுக்கக் கோரி டோக்கன்களை தேர்தல் அலுவலர் ரமேஷிடம் புகார் மனுவும் அளித்துள்ளனர்.
இதைப் பற்றி சேந்தமங்கலம் தொகுதி தேர்தல் அலுவலர் ரமேஷிடம் கேட்டபோது, 'இதுகுறித்து விசாரணைக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தீபன் சக்ரவர்த்தி ஆகிய நான்...! இது டிஜிட்டல் வேட்பாளரின் கதை