எலச்சிபாளையம் பகுதியில் கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்றன. இருபுறமும் சாலை விரிவாக்கப் பணிகள் முடிந்த பிறகு சாக்கடை கால்வாய்கள் அமைத்தனர். இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் சாக்கடை கழிவுநீர் தேங்குவதால், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் கீழே விழுந்து காயங்கள் ஏற்படுகின்றன.
எனவே இதனை சரி செய்ய வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறையினரிடம் பலமுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
ஆனால் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தற்போது மழை பெய்து வரும் நிலையில் சாக்கடை கழிவு நீர் வெளியேறாமல் குட்டை போல் தேங்கி நிற்கிறது.
இச்சூழலில், நேற்று மாலை திடீரென மழை பெய்ததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நீர் தேங்காமல் இருக்க உடனடியாக நடவடிக்கை வலியுறுத்தி மழை நீரில் நீச்சல் அடிக்கும் போராட்டத்தை நடத்தினர். இதனால் எலச்சிபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.