நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள வருகின்ற 21ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாமக்கல் வருகை தரவுள்ளார்.
இந்நிலையில், முதலமைச்சர் வருகையையொட்டி ஆய்வுக்கூட்டம் நடைபெறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், முதலமைச்சரின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைத்து துறை அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள், செய்தியாளர்கள், பயனாளிகள் என 500க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், கூட்டத்தில் தகுந்த இடைவெளி, முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கரோனா ஆய்வு முடிவுகள் கிடைத்தவுடன் அறிகுறி இல்லாதவர்கள் பல்வேறு கட்டுபாடுகளுடன் முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்வில் அனுமதிக்கப்படவுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.