நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தனியார் தொண்டு நிறுவனத்தினர் சார்பில் கரோனா தடுப்பு நிவாரணப் பணிகளுக்கு 3.82 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலத் துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "தமிழ்நாட்டில் கரோனா சூழலால் தற்போதைக்குப் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. அதேசமயம் சூழல் மாறும்போது எப்போது பள்ளிகளைத் தொடங்கலாம் என்பது குறித்து கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து முதலமைச்சர் முடிவுகளை எடுப்பார்.
பள்ளிகளில் இணைய வழி மூலம் பாடங்கள் நடத்துவது குறித்து முதலமைச்சரிடம் கலந்து ஆலோசனை மேற்கொண்டு ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியிடப்படும்" என்றார்.