நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 50 பேர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இவர்களில் குணமடைந்த ஆறு பேர் இரண்டு நாள்களுக்கு முன்னர், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை மகளிர் கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவிற்கு அனுப்பப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர்.
பின்னர், அவர்கள் ஆறு பேரை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி வழியனுப்பிவைத்தார். குணமடைந்த நபர்களுக்கு பழங்கள், கிருமி நாசினி திரவம், முகக்கவசங்கள் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. அப்போது கரோனாவால் மீண்ட ஒருவர், கைகளைத் தட்டி தங்களை உற்சாகத்துடன் வழியனுப்பிவைக்குமாறு கேட்டார்.
அதனைத்தொடர்ந்து அமைச்சர் தங்கமணி, மாவட்ட ஆட்சியர் மெகராஜ், சுகாதாரத் துறையினர் அவர்களை உற்சாகப்படுத்தி அவசர சிகிச்சை ஊர்திகள் மூலம் சொந்த ஊர்களுக்கு வழியனுப்பிவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, “நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 50 பேரும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இவர்களில் ஆறு பேர் குணமடைந்து நாமக்கல் வந்துள்ளனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்ட பின்னர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் பாஸ்கர் எங்களுடன் பணிபுரிந்தார்.
மாவட்டத்தில் 2000 ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு 1800 முடிவுகள் பெறப்பட்டுள்ளன. 50 ரத்த மாதிரிகளில் தொற்று உறுதியானது. மீதமுள்ள 1750 மாதிரிகளில் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. இந்த முடிவுகளின்படி நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றின் வேகம் குறைந்துவருவது தெரியவருகிறது” என்றார்.
இதையும் படிங்க: திருப்பத்தூரில் புதியதாக கரோனா பாதிப்பு இல்லை!