நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், மருத்துவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கரோனா பாதிப்பு ஒருவருக்கு கூட ஏற்படவில்லை. வெளிநாடுகளிலிருந்து வந்த 230 நபர்களையும், அவர்களது குடும்பத்தினைரையும் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம். மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்தால் நிலைமையைச் சமாளிக்க அரசு மருத்துவமனையில் 1,000 படுக்கைகளும், தனியார் மருத்துவமனையில் 850 படுக்கைகளும், வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் 520 வீடுகளும் தயார் நிலையில் உள்ளன.
எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்கும்போது அதிகளவு கூடுவதைத் தடுக்க அலுவலர்கள் தலைமையில் 28 சமூகக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் எட்டாவது கரோனா கண்டறியும் மையம்!